Mumbai: கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது மேல் சிகிச்சைக்காக இன்று அமெரிக்க செல்ல இருக்கிறார். உடல் நலத்தில் சிக்கல் அதிகரித்ததால் அமெரிக்கா செல்ல இருப்பதாக, அம்மாநில சட்டசபை சபாநாயகர் பிரமோத் சவந்த் தெரிவித்துள்ளார்.
“ உடல் நலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் தான் அமெரிக்கா செல்கிறார். கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை” என்று பிரமோத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வாரத்தில் அவர கோவா திரும்புவார் என்றார்.
இதற்கு முன் இந்த ஆண்டில் 3 மாதங்கள் அமெரிக்கா சென்று கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். ஜூன் மாதம் தான் திரும்ப வந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவர் இப்போது அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை லீலாவதி மருத்துவமனையில் பரிசோதனைக்காக ஆகஸ்ட் 23-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.” முதலமைச்சர் இல்லாததால், பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கும் அவசியம் இல்லை. அவர் அமெரிக்கா சென்று மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துவிட்டு விரைவில் வந்து விடுவார் என நம்புகிறேன்” என கோவா பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஷிரிபத் நாயக் “ முதலமைச்சர் இல்லாத இடத்தில் பொறுப்பை யார் கவனிப்பார் என்று தெளிவாக தெரியவில்லை. கோவா மாநில பா.ஜ.க தலைவர் வினய் டெண்டுல்கர் முதலமைச்சரை நேரில் சென்று இது குறித்து தெளிவை கேட்டறிவார்” என்றார்.