This Article is From Sep 15, 2018

மருத்துவ சோதனைக்காக டெல்லி செல்லும் மனோகர் பாரிக்கர்; கோவா விரையும் பாஜக குழு!

மனோகர் பாரிக்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இன்று பாஜக, கோவாவுக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது

மனோகர் பாரிக்கர் கடந்த 3 மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்

New Delhi:

உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மேல் சிகிச்சைக்காக இன்று டெல்லி செல்ல உள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்த பாரிக்கர், சென்ற வாரம் இந்தியா திரும்பினார். அவர் தற்போது வடக்கு கோவா மாநிலத்தில் உள்ள கண்டோலிமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம், பாரிக்கர், டெல்லிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மனோகர் பாரிக்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இன்று பாஜக, கோவாவுக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது. தற்போது, இருக்கும் மாற்று குறித்து அந்தக் குழு விவாதிக்கும் என்று தகவல் தெரிந்த வட்டாரம் கூறுகிறது.

இது குறித்து பாஜக தலைவர் அமித்ஷாவிடம், பாரிக்கரே பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பாரிக்கரின் உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் சாதரணமாக அவரால் வேலை செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, கோவாவில் கூட்டணி கட்சி அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளார் பாரிக்கர். கோவா மாநில பாஜக-வும் தனிப்பட்ட முறையில் கூடி பேசி, பாரிக்கரை சந்தித்துள்ளது.

பாஜக சார்பில் கோவாவுக்கு அனுப்பப்படும் குழுவில், ராம் லால் மற்றும் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மனோகர் பாரிக்கர் இல்லாத சமயத்தில், மாற்றாக இருக்கக்கூடிய நபரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தெரிகிறது.

பாரிக்கரின் உடல் நலக் குறைவால், கோவா மாநிலத்தின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாகவும், எனவே பாஜக தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. 

அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று ஜூன் மாதம் இந்தியா திரும்பிய பாரிக்கர், மீண்டும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றார். 

மும்பையில் சிகிச்சைப் பெற்று வந்த பாரிக்கர், ஆகஸ்ட் 30 ஆம் தேதி மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றார். கிட்டத்தட்ட 3 மாதங்கள் நிர்வாக பொறுப்பிலிருந்து விலகி இருந்த பாரிக்கர், தனது அமைச்சரவை சகாக்களை நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். 

.