Modi Xi Summit - #回到莫迪 - கோ பேக் மோடி என்பதின் மாண்டரின் மொழிபெயர்ப்பு இது என்று சொல்லப்படுகிறது.
சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping), இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) மாமல்லபுரத்தில் (Mahabalipuram) இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ட்விட்டரில் மோடி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.
சீன மொழியான மாண்டரினிலும் பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், #回到莫迪 என்ற ஹாஷ்டேக் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். #回到莫迪 - கோ பேக் மோடி என்பதின் மாண்டரின் மொழிபெயர்ப்பு இது என்று சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி, பிரசாரத்துக்கு வந்தாலும் சரி, வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கிவைக்க வந்தாலும் சரி, இப்படி வெளிநாட்டுத் தலைவர்களுடன் விழாவை சிறப்பிக்க வந்தாலும் சரி, #GoBackModi மற்றும் #TNWelcomesModi என்கிற இரு துருவ ஹாஷ்-டேக்கள் டிரெண்ட் ஆகாமல் இருந்தது கிடையது. சில நேரங்களில் #GoBackModi என்கிற ஹாஷ்-டேக், உலக அளவில் டிரெண்டான சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு ஹாஷ்-டேக்களும் இந்திய அளவில் டாப் டிரெண்டிங்கில் உள்ளன. நாளை வரை மோடி - ஜின்பிங் சந்திப்பு நடக்கும் என்பதால் சீக்கிரமே உலக டிரெண்டிங்கிலும் இரு ஹாஷ்-டேக்களும் வர வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன இடையே கடும் வார்த்தை போர் நடுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.
பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இரண்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜி ஜின்பிங் இடையிலான முக்கிய ஆலோசனை சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்றும், சந்திப்பு குறித்த எந்த கூட்டு அறிக்கைகளும் வெளியிடப்படாது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிக உயர்ந்த மட்டத்தில் தொடர்புகளை உருவாக்குவதும், முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் இதன் நோக்கம் என்று அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னைவருகிறார். அர்ஜுனனின் தவம், பஞ்ச ரதாஸ் மற்றும் கடற்கரை கோயில் ஆகிய மூன்று தளங்களின் புராதன நினைவுச் சின்னங்களைச் பிரதமர் மோடி சீன அதிபருக்கு சுற்றி காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.