This Article is From Mar 15, 2019

ராகுல் தமிழகம் வருகை! - டிவிட்டரில் டிரெண்டான #GoBackPappu

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாகர்கோவில் இன்று நடைபெறுகிறது. இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

ராகுல் தமிழகம் வருகை! - டிவிட்டரில் டிரெண்டான #GoBackPappu

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்த கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நாகர்கோவலில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வருகை தந்துள்ளார்.

இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்.

பின்னர், அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, கார் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.

இதனிடையே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர, ஏனைய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டன. எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackRahul என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. டிவிட்டர் இந்திய அளவில் டிரெண்டிங்கில் #GoBackRahul முதலிடத்தில் உள்ளது. இதேபோல், #GoBackPappu என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

 

மேலும் படிக்க: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி தமிழகம் வருகை!
 

.