“எதிர் வரும் காலங்களில் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பது நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடும் கருவியாக இருக்காது”
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் (P Chidambaram), நாட்டின் பொருளாதாரம் பற்றியும் அதற்கு பாஜக-வின் தீர்வுகளையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். பாஜக-வின் எம்.பி-யான நிஷகாந்த் துபே, நாடாளுமன்றத்தில், “எதிர் வரும் காலங்களில் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பது நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடும் கருவியாக இருக்காது,” என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். இதை மேற்கோள்காட்டி, பாஜக-வை சாடிய சிதம்பரம், “கடவுளே… இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்று,” என்றுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, 4.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது என்று அரசு புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவித்தன. இதைப் பற்றி மக்களவையில் பேசிய துபே, “1934 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜிடிபி என்ற ஒரு விஷயம் நடப்பில் இல்லை. ஆகையால் எதிர்காலத்தில் இது ஒரு பொருட்டாக இருக்காது,” என்றார்.
இதைத் தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரம், “ஜிடிபி தரவுகள் தேவையற்றவை, தனிப்பட்ட முறையிலான வரி விலக்கப்படும், இறக்குமதி வரி உயர்த்தப்படும். இதுவெல்லாம் பாஜக-வின் சீர்திருத்த நடவடிக்கைத் திட்டங்கள். கடவுளே, இந்தியப் பொருளாதாரத்தைப் காப்பாற்று,” என்று கேலி செய்யும் விதத்தில் கருத்திட்டுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை நிலவி வருவதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் உலக அளவில் நாடுகளின் பொருளாதாரத்தை மதிப்பிடும் அமைப்பான மூடி'ஸ் (Moody's), மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை சென்ற ஆண்டு நீக்கியது. மேலும் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த வளர்ச்சியானது, 5.6 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து, தேர்ந்த பொருளாதார வல்லுநரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், ‘8 சதவிகித வளர்ச்சியில் வளர வேண்டும் என்று நினைக்கும் ஒரு நாட்டுக்கு 4.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்,' என்று விமர்சித்துள்ளார்.