கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதற்காக, இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை சென்றார்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து, புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான வேட்டி, சேலை மற்றும் அரிசி போன்றவற்றையும் அவர் வழங்கினார்.
இதன் பின்னர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கன மழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களை வேறொரு நாளில் சந்திக்க உள்ளேன். நாளை மறுதினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புயல் சேதம் குறித்து விளக்க உள்ளேன்.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்பதால், சேதம் கணக்கிடும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முடியவில்லை. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்போம்.
கடந்த கால பேரிடர்களின் போது மத்திய அரசு குறைந்த நிதியே வழங்கி இருக்கிறது. கஜா புயலால் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. உயிரைப் பணயம் வைத்து மின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஜீ பூம்பா என்றால் மின் கம்பங்களை நட்டு விட முடியாது. ஒரு மின் கம்பத்தை நட 14 ஊழியர்கள் தேவை. 'ஜீ பூம்பா' என மந்திரம் கூறி சீரமைப்பு பணிகளை செய்துவிட முடியாது என கூறினார். வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.