ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது!
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விலை அதிகளவில் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே ஆபரணத்தங்கத்தின் விலை உயர காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.
கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 28,824 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த 1-ஆம் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.293-ம், சவரனுக்கு ரூ.2,344-ம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 9 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 28,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை எடுத்துக் கொண்டால், 1 கிராம் 48 ரூபாய் 50 காசுகளுக்கும் ஒரு கிலோ 48,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் ஒரு சவரன் இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது, பலதரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.