Danang, Vietnam: வியட்நாம்: வியட்நாம் பா நா மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘கோல்டன் ப்ரிட்ஜ்’ அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட ‘கோல்டன் ப்ரிட்ஜ்’ பாதையை இரண்டு பெரிய கைகள் தாங்கிப் பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக விரிந்து நிற்கும் கைகள், கோல்டன் ப்ரிட்ஜை தாங்கி நிற்கின்றன. இந்த கைகள், ‘கடவுளின் கைகள்’ எனவும் அழைக்கப்படுகிறது.
ஜோல்டன் ப்ரிட்ஜில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதனால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வியட்நாம் வருகின்றனர்.
கடந்த 1919 ஆம் ஆண்டு, பிரெஞ்சு காலனியர்கள் உருவாக்கிய இந்த மலைப்பாதையை வியட்நாம் சுற்றுலா துறையினர் புதுப்பித்துள்ளனர். தற்போது, பா நா மலைப்பகுதி பிரபலமான சுற்றுலா தளமாக மாறி வருகிறது. கோட்டை, தோட்டங்கள், மெழுகு சிலை அருங்காட்சியகம், போன்றவை இடம் பெற்றுள்ளது
எனினும், இந்த மலைப்பகுதியில் உள்ள கா வாங் எனப்படும் கோல்டன் ப்ரிட்ஜ், சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்துள்ளது. உலகின் அழகிய ப்ரிட்ஜ்களில் ஒன்றாக கா வாங் ப்ரிட்ஜ் மாறி வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கியமான சுற்றுலா நாடாக வியட்நாம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, 13 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வியட்நாமிற்கு வந்துள்ளனர்.