ஹைலைட்ஸ்
- கடந்த ஆண்டு கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்
- அவர் வலதுசாரி அமைப்புகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வந்தார்
- இதுவரை 9 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்
Bengaluru: பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு மேலும் இருவரை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது. இதுவரை 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரின் வீட்டுக்கு முன்னேலேயே சில நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்தக் கொலையை சில அடிப்படைவாதக் குழுக்குள் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அமித் பாடி, கணேஷ் மிஸ்கின் என்பவர்களைத் தான் போலீஸ் தற்போது ஹூப்ளியில் கைது செய்துள்ளது. அவர்களை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளது போலீஸ். இருவரும் கௌரி லங்கேஷ் கொலையில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸ் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆயினும் அவர்கள் லங்கேஷை கொலை செய்த ஆயுதத்தை அழிப்பதற்கு துணை புரிந்தினர் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுவது பரசுராம் வாக்மாரே. அவர்தான், லங்கேஷை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் அவரை சில மாதங்களுக்கு முன்னரே கைது செய்து விட்டதால், தற்போது நடந்துள்ள கைது நடவடிக்கை, வழக்கு குறித்து பல கதவுகளை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை குறித்து கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, ‘ஜூலை 18 ஆம் தேதி மோகன் நாயக் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சீக்கிரமே சிறப்புப் புலனாய்வு குழு இந்த வழக்கு விசாரணையை முடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.