சென்னை விமான நிலையத்திற்கு வந்த கோமதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
23-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இன்று அவர் தாயகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த கோமதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கோமதி, ‘எனக்கு கிடைத்த வெற்றி என்பது கடின உழைப்பினால் வந்தது. நான் தற்போது பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அங்கு இருப்பதில் பெரிய விருப்பம் இல்லை. தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் மிகக் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். இனி வரும் தலைமுறையினர் அப்படி கஷ்டப்படக் கூடாது. அவர்களுக்கு அடிப்படை வசிதகள் செய்துத் தரப்பட வேண்டும். அனைவருக்கும் பஸ் வசதி செய்து தரப்பட வேண்டும். தமிழக அரசு மட்டும் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவும் முழு மூச்சுடன் முயல்வேன்' என்று திறந்த மனதுடன் பேசினார்.
2013 இல் கோமதியின் அப்பா புற்றுநோயால் இறந்து விட தன்னுடைய லட்சியத்தை அடைய கூடுதல் உத்வேகத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தன்னுடைய கல்லூரிக் காலத்திலும் தடகள விளையாட்டில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்து இன்று இந்தியாவையே தன் திறமையால் தலைநிமிரச் செய்துள்ளார் கோமதி . இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் கோமதியின் ஊரை நோக்கியும் அவரின் வாழ்வியலைக் காட்டியும் வருகிறது.