This Article is From Jun 08, 2018

'இனி ஆயுதங்களுக்கு AI இல்லை!'- புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் கூகுள்

செயற்கை நுண்ணறிவு அல்லது ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பம் தான் டெக் நிறுவனங்களைப் பொறுத்தவரை அடுத்த இலக்காக இருக்கிறது

'இனி ஆயுதங்களுக்கு AI இல்லை!'- புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் கூகுள்

சுந்தர் பிச்சை

ஹைலைட்ஸ்

  • AI என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும்
  • கூகுள் நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாகும்
  • இந்த புதிய முடிவை சுந்தர் பிச்சை ப்ளாக் மூலம் தெரிவித்துள்ளார்

செயற்கை நுண்ணறிவு அல்லது ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பம் தான் டெக் நிறுவனங்களைப் பொறுத்தவரை அடுத்த இலக்காக இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

இந்த விஷயம் குறித்து கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, `மிக சக்தி வாய்ந்த தொழில்நுட்பங்கள் மூலம் மிகவும் கஷ்டனமான கேள்விகளும் எழும். கூகுள் நிறுவனம் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது. எனவே, இந்தத் துறை சார்ந்து ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக கூகுள் இருக்கும். எனவே, ஆயுதங்கள் பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இனி கூகுள் நிறுவனம் அனுமதிக்காது. சர்வதேச சட்டங்களைப் புறக்கணிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருநாளும் கூகுள் பயன்படுத்த அனுமதிக்காது. மனித உரிமைகளுக்கு எதிராக எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்' என்று கூறியுள்ளார். 

கூகுள் நிறுவனம், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தற்போது ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தும் திட்டத்தில் பங்காற்றி வருகிறது. இந்தத் திட்டத்தின் புரிந்துணர்வு காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு, கூகுள் இந்தத் திட்டத்தில் தொடராது என்று இந்த அறிவிப்பிட் மூலம் தெரிகிறது. 

கூகுள் நிறுவனம், ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தும் திட்டத்தில் இணைந்த உடன் உலக அளவில் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மேலும், பல கூகுள் நிறுவன ஊழியர்கள் பலர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து வந்தனர். இந்த நிலையில் தான், ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், அமெரிக்க ராணுவத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டாலும் ஃபேஸ்புக், அமேசான் போன்ற போட்டி நிறுவனங்கள் கூகுளின் இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தொடர்ந்து ஆயுதம் தயாரித்தளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. எது எப்படியோ, கூகுளின் இந்த கொள்கை சார்ந்த முடிவு மற்ற நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.