மருத்துவர் வெங்கடசாமி, பிரபல அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார்
New Delhi: தமிழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம், டூடுள் வைத்து கெளரவித்துள்ளது
பிரபல அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான மருத்துவர் வெங்கடசாமி, கடந்த 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார்.
எட்டயபுரத்தில் உள்ள வடமலாபுரத்தில் பிறந்த மருத்துவர் வெங்கடசாமி, கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார்.
அப்போது, கடுமையான மூட்டுவலி (rheumatoid arthritis) அவரைத் தாக்கியது. இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருக்க வைத்த மூட்டுவலியால் இனிமேல் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்கிற நிலைமை. எனவே, நீண்ட நேரம் கருவிகளைப் பிடிக்க வேண்டிய தேவையில்லாத கண் மருத்துவராக முடிவு செய்தார். கண் மருத்துவம் பயின்று முடித்த பிறகு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார்.
மதுரையில் முதல்முறையாக 11 படுக்கை வசதியுடன் அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கினார். இப்போது இந்தியாவின் முன்னனி கண் மருத்துவமனைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
தனது 87 வயதில் ஏற்பட்ட உடல் நல குறைவால், கடந்த 2006 ஆம் ஆண்டு, ஜுலை 7 ஆம் தேதி மதுரையில் காலமானார். அவரால் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனை உலகளவில் பல கிளைகளுடன் சிறந்த மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. 1973 –ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற அவர், சர்வதேச ஹெலன் கெல்லர் விருது மற்றும் பி.சி.ராய் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.