கபீல் கான் கடந்த ஆக.2017-ல் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவராக நியமிக்கப்பட்டார்
Lucknow: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த 2017ஆம் ஆண்டு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் கபீல் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் கபீல் கானை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து அறிவித்துள்ளது.
கபீல் கான் கடந்த ஆக.2017-ல் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவராக நியமிக்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் உள்ள ஐசியூ மற்றும் குழந்தைகள் வார்டில், அடுத்தடுத்து 2 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்கு மருத்துவமைனயில் ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருந்ததே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் மருத்துவர் கபீல் கான் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த இடைநீக்கத்திற்கு முக்கிய காரணமாக, இது போன்ற அவரச காலத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரியப்படுத்தாதது, கவனக்குறைவாக இருந்தது உள்ளிட்ட காரணங்கள் அரசால் கூறப்பட்டன.
இதன் பின்னர் மருத்துவர் கபீல் கான் மற்றும் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபர் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், செப்டம்பர் 2, 2017 அன்று கபீல் கான் உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, நேற்று கபீல் கானிடம் ஒப்படைக்கப்பட்ட 15 பக்க விசாரணை அறிக்கையில், உயர்நீதமன்றம் கூறியதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. கபீல் கான் குறித்து விசாரணை செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்ஷூகுமார் இந்த அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் மாநில அரசிடம் சமர்பித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் கபீல் கான் கூறும்போது, உண்மையான குற்றவாளியை அரசாங்கத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், நான் பலிகடாவாக ஆக்கப்பட்டேன். இத்தனை மாதங்களாக இந்த அறிக்கை எனக்கு அனுப்பப்படவில்லை என்றார்.
மேலும் அவர் கூறும்போது, இது தொடர்பாக அரசு மன்னிப்பு கோர வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.