மின்விபத்தில் இரு கைகளும் பாதிக்கப்பட்டுச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மாற்றுக் கைகள் பொருத்தி நலம்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான நாராயணசாமி (30) என்பவர் 2 மாடிக் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த போது உயர் அழுத்த மின்கம்பி தாக்கியதில் இரண்டு கைகளிலும் கை மூட்டு வரை சேதம் அடைந்தன. இதனால், நாராயணசாமியால் எந்தச் செயலிலுமே ஈடுபட முடியாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும் போனது.
இந்நிலையில், உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்பட்ட கைகளைக் கொண்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்புத்துறைத் தலைவர் டாக்டர் ரமாதேவி தலைமையிலான மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் சுமார் 13 மணிநேர கைமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பிசியோ தெரபி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகளின் மூலம் நாராயணசாமி முழுமையான குணம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து நாராயணசாமி கூறும்போது, கைமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் எனது இரு கைகளும் செயல்படுகின்றன. தற்போது எனது கைகளால் என்னால் எனது தலையை வார முடியும், எனது சட்டையை அணிந்து கொள்ள முடியும், ஸ்பூன்கள் கொண்டு எனது உணவை உண்ண முடியும், எனது கைகளால் கோப்பையை தூக்கி தேநீர் அருந்த முடியும், எனது போனை அட்டென் செய்ய முடியும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனக்கு வெற்றிகரமாக மாற்று கைகள் பொருத்திய மருத்துவர் ரமாதேவி தலைமையிலான மருத்துவர் குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மாற்றுக் கைகள் பொருத்தப்பட்ட நாராயணசாமிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தன்னைச் சந்தித்த நாராயாணசாமிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றுக் கைகள் பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர் குழுவுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.