கடந்த 15ஆம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல், கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு , மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து சென்றுள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கஜா புயல் இதுவரை வந்த புயல்களை விட மிக தீவிரமானது, சேதமும் அதிகமானது. அரசின் முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக, உயிர் இழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்பை அரசியலாக்க சில எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.