This Article is From Dec 27, 2019

ரயில் கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல: கொதிக்கும் ராமதாஸ்!

ரயில்வே துறை என்பது மக்களுக்கு சேவை வழங்கும் துறையாகும். இதில் லாப நோக்கத்தைப் பார்க்கக்கூடாது. ரயில்களின் இயக்கச் செலவுகளுக்கும், அத்துறையின் வருவாய்க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.

Advertisement
தமிழ்நாடு Edited by

ரயில்வே துறை உத்தேசித்துள்ள கட்டண உயர்வு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் - ராமதாஸ்

கடந்த காலங்களில் 7 ஆண்டுகளில் 4 முறையாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை, தற்போது ஒரே முறையில் அதே கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த முயல்வது எந்த வகையிலும் நியாயமல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே துறையின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் பயணிகள் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டிருக்கிறது. ரயில்வே துறை உத்தேசித்துள்ள கட்டண உயர்வு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்பதால், அது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரயில்களில் பயணிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்.

கடந்த காலங்களில் ரயில் கட்டண உயர்வு சமாளிக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வகுப்புகளின் பயணிகள் கட்டணத்தையும் கிலோமீட்டருக்கு 40 பைசா வீதம் உயர்த்த ரயில்வே வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆகும்.

உதாரணமாக, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 653 கிலோ மீட்டர் ஆகும். இதற்கு அடிப்படைக் கட்டணமாக 335 ரூபாயும், முன்பதிவுக்கட்டணம், விரைவு வண்டிக்கான கட்டணம் ஆகியவற்றுக்காக 50 ரூபாயும் சேர்த்து மொத்தம் 385 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு ஆகும். அதனால் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பேருந்துகளை தவிர்த்து விட்டு ரயில்களில் பயணிக்கின்றனர். இது தான் ரயில்வே துறை வெற்றிக்கு காரணமாகும்.

Advertisement

ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளவாறு கிலோ மீட்டருக்கு 40 பைசா உயர்த்தப்பட்டால் சென்னை - திருநெல்வேலி இடையிலான அடிப்படைக் கட்டணம் 594 ரூபாயாகவும், பிற கட்டணங்களையும் சேர்த்து 644 ஆகவும் அதிகரிக்கும். இது 77 விழுக்காடு உயர்வு ஆகும். இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், அது பேருந்து கட்டணத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி ரயிலில் பயணிக்க ஏழை, நடுத்தர மக்கள் முன்வர மாட்டார்கள். இது ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதைத் தவிர வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்.

பாமகவைச் சேர்ந்தவர்கள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை ரயில் கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது.

Advertisement

ஆனால், அதற்குப் பிந்தைய 7 ஆண்டுகளில் ரயில் கட்டணம் 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முறைகளிலும் சேர்த்து எந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதோ, அதே அளவுக்கு கட்டண உயர்வை ஒரே முறையில் நடைமுறைப்படுத்த முயல்வது எந்த வகையிலும் நியாயமல்ல. இது ஏழைகளிடமிருந்து ரயில்களை விலக்கி வைத்து விடும்.

ரயில்வே துறை என்பது மக்களுக்கு சேவை வழங்கும் துறையாகும். இதில் லாப நோக்கத்தைப் பார்க்கக்கூடாது. ரயில்களின் இயக்கச் செலவுகளுக்கும், அத்துறையின் வருவாய்க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.

Advertisement

அதேபோல், ரயில்வே துறையின் ஓய்வூதிய சுமையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாகனமாக ரயில்களின் பயணக் கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடருவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement