ஹைலைட்ஸ்
- வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்
- நுழைவு பகுதியில் கட்டாயமாக உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி வேண்டும்
- கேமிராவுக்கு முன் தோன்றுபவர்களைத் தவிர அனைவரும் முககவசம் அணிய வேண்டும்
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் முதல் முழு முடக்கம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே மாதம் முதல் முழு முடக்கத்தில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தற்போது சினிமா படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியினை வழங்கியுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தின் நுழைவு பகுதியில் கட்டாயமாக உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், முககவசமும், ஆறு அடி தொலைவு தனிமனித இடைவெளியையும் பின்பற்றப்பட வேண்டுமென வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையுடனும், உள்துறை அமைச்சகத்துடனும் கலந்தாலோசித்த பின்னர் இறுதி செய்யப்பட்ட இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள், படப்பிடிப்பு தளங்களில் உள்ள படப்பிடிப்பு குழுவினரையும், நடிகர்களையும் பாதுகாக்க உதவும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு நெறிமுறைகள் படப்பிடிப்பு இடங்களிலும் பிற பணியிடங்களிலும் போதுமான இடைவெளியையும், முறையான சுத்திகரிப்பு, கூட்ட மேலாண்மையுடன் சேர்த்து பாதுகாப்பு உபகரணங்களுக்கான ஏற்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் உறுதி செய்கின்றது.
கேமிராவுக்கு முன் தோன்றுபவர்களைத் தவிர அனைவரும் முககவசம் அணிந்திருக்க இந்த நெறிமுறை வலியுறுத்துகின்றது.
தனி மனித உடல் ரீதியான தொடர்புகளை குறைப்பதே இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் மையமாக உள்ளது. மேலும், சிகை அலங்கார பணியாளர்களும் மேக்அப் பணியாளர்களும் கட்டாயமாக சுகாதார பாதுகாப்பு உடைகளை(PPE) கட்டாயமாக அணிந்திருக்க நெறிமுறை வழிகாட்டுகிறது.
அதேபோல ஆரோக்ய சேது செயலியையும் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று கராணமாக தடுப்பு நடவடிக்கையாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.