கிராம புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டினை வழங்கி வந்திருந்தது. இதனை எதிர்த்து தனியார் மருத்துவர்கள், தமிழ்நாடு மருத்துவ அலுவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்நிலையில் இட ஒதுக்கீடு உள்ள விசயங்கள் இந்திய மருத்துவ கவுன்சில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றும், மாநில அரசுகள் இது குறித்த முடிவுக்ள எடுக்க உரிமையில்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வாதாடியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, கிராம புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகளை அங்கீகரித்துள்ளதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், மாநில அரசு அதிகாரங்களில் இந்திய மருத்துவ கவுன்சில் தலையீட்டையும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதன்படி தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் வழங்கும் சலுகைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.