This Article is From Oct 11, 2019

“யாராவது வந்தாதான் தமிழகத்தை க்ளீன் பண்றாங்க…”- தமிழக அரசை துளைத்தெடுத்த Madras High Court!

Modi Xi Summit -“தற்போது மாமல்லபுரம் மிகவும் சுத்தமாக மாறியுள்ளது. பெரிய தலைவர்கள் இங்கு வந்தால்தான் சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்கிறது."

“யாராவது வந்தாதான் தமிழகத்தை க்ளீன் பண்றாங்க…”- தமிழக அரசை துளைத்தெடுத்த Madras High Court!

Modi Xi Summit - "தமிழகம் சுத்தமாக மாற வேண்டும் என்றால், பெரிய தலைவர்கள் அவ்வப்போது வர வேண்டும் போல…”

Chennai:

சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping), மற்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) மாமல்லபுரத்தில் (Mahabalipuram) இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இருவரும் சென்னைக்கு வருவதையொட்டி நகரத்தின் பல இடங்கள் சீரமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. அதேபோல மாமல்லபுரத்திலும் துப்புரவுப் பணிகள் முழு வீச்சில் நடந்தன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘தமிழகத்துக்கு யாராவது முக்கிய தலைவர்கள் வந்தால்தான், சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கிறது அரசு' என்று சாடியுள்ளது. 

சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் சி.சரவணன் அடங்கிய அமர்வுக்கு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கு விசாரணையின்போது நீதிமன்ற அமர்வு, “தற்போது மாமல்லபுரம் மிகவும் சுத்தமாக மாறியுள்ளது. பெரிய தலைவர்கள் இங்கு வந்தால்தான் சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்கிறது. அப்படிப் பார்த்தால் தமிழகம் சுத்தமாக மாற வேண்டும் என்றால், பெரிய தலைவர்கள் அவ்வப்போது வர வேண்டும் போல…” என்று கருத்து தெரிவித்தது. 

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த மாதம் 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுக-வினர் வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தன.

ஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்துக்கு வர உள்ளனர். அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைக்க தமிழக அரசு, நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. அதற்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம், “அரசியல் கட்சிகளுக்குத்தான் பேனர் கட்டுப்பாடு, அரசுக்கு அல்ல” என்று கூறியது. இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பது குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


 

.