தமிழக அரசு மருத்துவமனைகளில் இறுதி ஆண்டு படிக்கும், சுழற்சிமுறை உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்கள் (CRRI) மற்றும் அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்கள் ( Non Service post graduate Degree/Diploma and Higher Speciality Course Students) பயிலும் காலத்துக்கு அரசு ஊக்கத் தொகை அளித்து வருகிறது. இது 2014-ம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது.
இப்போது மீண்டும் மேற்காணும் மாணவர்கள் தரப்பில் இருந்த ஊக்கத் தொகையை உயர்த்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்து 1.04.2018 பின் தேதியிட்டு அவர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகரித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்படிப்பு ஊக்கத் தொகையுடன், உள்ளிருப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 600 ரூபாய் அதிகரித்து வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ( Non Service post graduate Degree/Diploma and Higher Speciality Course Students) ஆண்டு தோறும் 1000 ரூபாய் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.