This Article is From Oct 10, 2018

‘துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் பேசவில்லை!’- ராஜ் பவன் புதிய விளக்கம்!

'அவர் தனிப்பட்ட முறையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவில்லை’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தெற்கு Posted by

‘தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசவே இல்லை’ என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ‘தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்க பல கோடி ரூபாய் பணம் கைமாறுகிறது. இதை நான் முதலில் நம்பவில்லை. ஆனால், அது குறித்து எனக்கு நேரடியாக தெரியவந்த போது, நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தேன். நான் துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்கிறேன்’ என்று பேசியதாக கூறப்பட்டது.

இது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சிகள், ‘வெறுமனே புகார் தெரிவிப்பது மட்டும் ஆளுநரின் வேலை கிடையாது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தன.

இந்நிலையில் இந்த விவாகரம் குறித்து ராஜ் பவன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஆளுநர் தனிப்பட்ட முறையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஆளுநரின் பேச்சு குறித்து ஊடகங்கள், சரியான முறையில் செய்தி வெளியிடவில்லை. அன்று ஆளுநர் பேசியது, ‘துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடப்பதாக பல்வேறு கல்வியாளர்களிடம் எனக்குத் தகவல் வந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. நான் பொறுப்பேற்றதில் இருந்து 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமித்துள்ளேன்’ என்று தான் பேசினார். அவர் தனிப்பட்ட முறையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவில்லை’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement