This Article is From Jul 02, 2019

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும்: செங்கோட்டையன்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும்: செங்கோட்டையன்

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. அதில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்தது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல், இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. மேலும், விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இருமொழிக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும், அந்த முடிவிலேயே உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மூன்று மொழிக் கொள்கையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

.