ஹேக் செய்ததற்காக இஸ்ரேலின் NSO குழுமத்திற்கு வாட்ஸ்ஆப்-ன் தாய் நிறுவனமான Facebook நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஹைலைட்ஸ்
- அமெரிக்க ஆதரவு நாடுகளில் WhatsApp Hacking நடந்துள்ளது.
- அரசு உயர் அதிகாரிகள், ராணுவ தளபதிகளின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்
- இஸ்ரேல் நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
Washington: கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் WhatsApp ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்த நிலையில், சுமார் 20 நாடுகளில் அரசு உயர் அதிகாரிகள், ராணுவ தளபதிகளின் WhatsApp -ம் ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தரும் புதிய தகவல் வெளி வந்துள்ளது.
சாதாரண மக்கள் முதல் ஜனாதிபதி வரையில் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷனாக WhatsApp இருந்து வருகிறது. இதனை ஹேக் செய்தால் பல முக்கிய தகவல்களை திருடிக்கொள்ளலாம் என்பது எதார்த்தமான உண்மை. அந்த வகையில் மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி அதன் மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய புள்ளிகளின் வாட்ஸ்ஆப்-யை இஸ்ரேலை சேர்ந்த NSO என்ற நிறுவனம் உளவு பார்த்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு WhatsApp ஒரு விசாரணைக்குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. அவர்கள் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்காத நிலையில், 20 நாடுகளில் WhatsApp ஹேக் செய்யப்பட்டிருப்பதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிர்ச்சி தரும் வகையில் ஹேக் செய்யப்பட்டவர்கள் அரசின் உயர் அதிகாரிகளி, ராணுவ தளபதிகள் என்றும் தகவல் கசிந்துள்ளது. இஸ்ரேல் அமைப்பு விரித்த வலையில் சிக்கிய 20 நாடுகளில் பெரும்பான்மையானவை அமெரிக்க ஆதரவு நாடுகள் ஆகும்.
வாட்ஸ்ஆப் ஹேக்கிங்கில் ராணுவ ரகசியங்கள் திருடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஹேக்கிங்கால் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மெக்சிகோ, பஹ்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயனாளிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதற்கிடையே உளவு பார்த்தது, ஹேக் செய்ததற்காக இஸ்ரேலின் NSO குழுமத்திற்கு வாட்ஸ்ஆப்-ன் தாய் நிறுவனமான Facebook நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், NSO குழுமம் வாட்ஸ்ஆப் சர்வர்களை ஹேக் செய்யத் தேவையானவற்றை அதன் வாடிக்கையாளர்களுக்கு விற்றதாகவும், அந்த வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹேக்கிங் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 29-ம்தேதியில் இருந்து மே 10-ம்தேதி வரை 1400 பயனாளிகளிடம் நடந்திருக்கிறது என்று வாட்ஸ்ஆப் அனுப்பியுள்ள சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தாங்கள் எந்தவொரு விதிகளை மீறவில்லை, குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது இஸ்ரேலின் NSO நிறுவனம்.