கூடுதலாக 8,000 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
New Delhi: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கூடுதலாக 8,000 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சி-17 போக்குவரத்து விமானம் மூலம் துணை ராணுவப்படையினர் ஸ்ரீநகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. ஏற்கனவே கடந்த வாரத்தில் மட்டும், 35,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டு வந்தனர். விமானப்படையினர் மற்றும் ராணுவப்படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்த மத்திய அரசு இதனை ரகசியமாக வைத்து வந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக பல அதிரடி நடவடிக்கைகளை காஷ்மீரில் மத்திய அரசு செய்து வந்தது.
அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது என்று பொதுவெளியில் தெரிவித்துவிட்டு, அமர்நாத் யாத்திரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக தங்கள் செந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல உத்தரவிட்டது.
தொடர்ந்து, வெளிமாநில மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த அனைவரும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தச் சூழலில் நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை அறிவித்தார். தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370 என்பது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கும் 'தற்காலிக ஏற்பாடு' ஆகும். இந்த சட்டம் மாநிலத்தில் தனது சொந்த அரசியலமைப்பை உருவாக்க அனுமதிக்கிறது. மேலும், மாநிலத்தின் மீது நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களுக்குள் உட்படாமல் இது கட்டுப்படுத்துகிறது.
இதனால், பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், நிதி மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்டவை தவிர்த்து மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மாநில அரசின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும். மேலும், சட்டப்பிரிவு 370-ன் கீழ் நாடாளுமன்றத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது.
சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்படுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்தும் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். இதன்மூலம் அம்மாநில மக்கள் பெற்று வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தாகும், மாநிலத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் ஆளுநர் எடுக்கலாம். நிரந்தர குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்க முடியும், பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க முடியும்.