தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8 ஆயிரத்தை கடந்திருக்கக்கூடிய நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் கடைகளைத் திறப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் சில கடைகள் மீது, அரசு சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்தில் போடப்பட்டுள்ள சாலையோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை அடாவடித் தனமாக அப்புறப்படுத்தி உள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்துப் பலர் புகார் தெரிவிக்கவே, திருப்பத்தூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயக்குமார், “வாணியம்பாடி முனிசிபாலிட்டி கமிஷனரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மிகவும் ஒழுக்கமான மற்றும் நேர்மையான அதிகாரி. கோவிட்-19 பரவல் தடுப்புக்காக தன் வாழ்க்கையை முன்வைத்துப் போராடி வருகிறார். இந்த வீடியோவில் நான் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எப்படி இருந்தாலும் அனைத்து வீதி மீறல்களுக்கும் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடாவடித் தனமாக அப்புறப்படுத்திய கடைகளுக்கான இழப்பீட்டினை வழங்கி, தான் அவ்வாறு நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் “நாங்கள் பல நாட்களாக பல முறை கூறியும் விதிகளை மீறி கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. கோயம்பேடு போல இந்த இடமும் தொற்று பரவலுக்கான மையமாக மாறிவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக இருந்தோம். இதன் காரணமாகவே பலவந்தமாக கடைகளை அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று. கடந்த ஒன்றை மாத காலமாக சரியான உறக்கம்கூட இல்லாமல் இரவு பகலாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்காகவே நாங்கள் பாடுபடுகிறோம். இவ்வாறு நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.“ என வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில்,கொரோனா தடுப்புப் பணியில் ஈட்டுப்பட்டுள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தினை அரசு குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், “டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதிமீறல்களுக்கும் எல்லாவித பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திதரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது.“ என்றும்,
மேலும், “கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு குறித்த வாணியம்பாடி ஆணையரின் வருத்தம் வெளிப்படுத்துகிறது. எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி கடைகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.“ தெரிவித்துள்ளார்.