பாகிஸ்தானை ஒட்டியுள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
பிப்ரவரி 14-ம்தேதி பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை பாகிஸ்தானின் பகவல்பூரை மையமாக செயல்படும் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்தியுள்ளது.
2001 டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2016 ஜனவரியில் பதான் கோட் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்டவற்றில் ஜெய்ஷ் அமைப்பு நடத்தியுள்ளது.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ் அமைப்பின் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்தன. இதேபோன்று அந்த முகாம்களுக்கு பாகிஸ்தான் நாள்தோறும் உதவி செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இந்த தகவல்களை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
அடுத்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தயாராகி வருவதாக மத்திய அரசுக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது. இதனை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்திய விமானப்படை இந்த அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் நடத்தி வந்த தீவிரவாத முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.