‘தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது’ என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் நடந்த ‘தரமான கல்வியை வளர்த்தெடுத்தல்’ என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றும் போது, ‘தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்க பல கோடி ரூபாய் பணம் கைமாறுகிறது. இதை நான் முதலில் நம்பவில்லை. ஆனால், அது குறித்து எனக்கு நேரடியாக தெரியவந்த போது, நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தேன். நான் துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்கிறேன்’ என்று பேசினார்.
ஆளுநரின் பேச்சுக்கு பாமக-வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்துள்ள ஆளுநர், அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார். ஊழலை கண்டுபிடிப்பது மட்டும் ஆளுநரின் வேலை இல்லை. அதை சரி செய்ய உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். தமிழக பல்கலைக்கழகங்களில் நியமனம் செய்யப்படும் துணை பேராசிரியர் பதவி முதல் துணை வேந்தர் பதவி வரை அனைத்திலும் ஊழல் மலிந்துள்ளது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)