This Article is From Nov 30, 2018

புயல் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!

கஜா புயல் நிவாரண நிதியாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

புயல் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!

கடந்த 15ஆம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல், கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து சென்றுள்ளது.

இதனிடையே, கஜா புயல் பாதிப்பிற்கு தாராளமாக நிவாரணம் வழங்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.

.