This Article is From Sep 12, 2018

‘ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்!’- எழுவர் விடுதலை குறித்து ஜெயக்குமார்

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

‘ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்!’- எழுவர் விடுதலை குறித்து ஜெயக்குமார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழக அமைச்சரவையின் முடிவு தான், தமிழக மக்களின் எண்ணம். அதைத் தான் அமைச்சரவை பிரதிபலித்துள்ளது. வரும் நாட்களில் ஆளுநர் இந்த விஷயம் குறித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார் நம்பிக்கையுடன்.

.