நேற்றிரவு கிரண்பேடி வீட்டின் முன்பாக உறங்கி போராட்டம் நடத்தினார் நாராயணசாமி
ஹைலைட்ஸ்
- ஹெல்மெட் விவகாரத்தில் வெடித்தது நாராயணசாமியின் தர்ணா
- ஆளுநர் வீட்டின் முன்பு தர்ணா நடத்துகிறார் நாராயணசாமி
- நாராயணசாமிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு புதுவை சம்பவம் ஓர் உதாரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
புதுவையில் கிரண்பேடிக்கும் – நாராயணசாமிக்கும் இடையே இருந்து வந்த மறைமுக மோதல் தற்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது. ஹெல்மெட் கட்டாயம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கிரண் சொல்ல, அதெல்லாம் முடியாது. முறைப்படி விதி கொண்டு வந்துதான் நிறைவேற்ற வேண்டும் என்று நாராயணசாமி மல்லுக் கட்டினார்.
இன்னொருபக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் ஹெல்மெட்டுகளை ரோட்டில் போட்டு உடைத்து கிரண்பேடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கருப்புச் சட்டை அணிந்த முதல்வர் நாராயணசாமி கிரண்பேடி வீட்டின்முன்பாக தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினார்.
நேற்று அவரது இல்லம் முன்பாக தொண்டர்களுடன் இரவில் படுத்து உறங்கினார். ஒரு துணை நிலை ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஒருவர் தர்ணா நடத்தியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கும் அவர் போராட்டத்தை தொடர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில் நாராயணசாமிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது.
ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு இதுவே உதாரணம்! ஆளுநர் பதவி தேவைதானா என்கிற கேள்வியே மீண்டும் எழுகிறது.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.