தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் தமிழக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகள் அனைத்தும் அந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கேற்ப சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நேற்றைய தினம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை முக்கியமான நடவடிக்கையாக தெரிவித்த அவர், மத்திய பிரதேச வளங்கள் அனைத்தும் தனது மாநில மக்களுக்கே சொந்தமானது என்றும் கூறியிருந்தார்.
முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநிலத்திலும் வரவேற்புகள் வந்துள்ளன. பல அரசியல் தலைவர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிகழத்திலும் அதுபோன்ற அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மத்திய பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்திலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.