ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று நேற்று வாபஸ் பெறப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈருபட்டிருந்த கோவை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரை, தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பள்ளி மாணவர்களே போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 22-ம்தேதியில் இருந்து இந்த போராட்டம் நடந்து வந்தது. இதில் ஈடுபட்ட சுமார் 1500-க்கும் அதிகமான ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
கோவை, கண்ணம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் அரசு பள்ளியில் சரவணக்குமார் மற்றும் தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர்கள் பணி செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக இருவரும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால், பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், அவர்கள் இருவருக்கும் பணியிட மாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பள்ளி மாணவர்களே இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.