இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய வானொலியின் ஐந்து மண்டல சேவைகளை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பாணையை இந்திய பொது சேவை ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி வெளியிட்டுள்ளது.
பிரசார் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அகில இந்திய வானொலி சேவையை இன்னும் முன்னேற்றவும், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கிலும் அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி மண்டல சேவைகளை உடனடியாக மூட உத்தரவிடப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களிலும் பல அவசர நிலை காலங்களிலும் வானொலி மூலமாகத்தான் பொது மக்களிடம் அரசு தொடர்பு கொண்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி கூட, அகில இந்திய வானொலியின் வீச்சை பயன்படுத்தி மாதம் ஒரு முறை ‘மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.