தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பங்கேற்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அறிகுறிகள் இல்லை என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசும் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தனியரசு இடம்பெற்றுளாரா என்று கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக தனியரசு கூறும்போது, அதிமுகவுடன் நட்பு தொடர்வதால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைமை அழைத்ததால் மரியாதை நிமித்தமாகவே பங்கேற்கிறேன். தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இணையலாமா என்று கட்சி செயற்குழு, பொதுக்குழு முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
இதனிடையே பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜயகாந்த் கூட்டணியில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆச்சர்யங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.