மாசடைந்த சட்லெஜ் மற்றும் பியாஸ் ஆறு
New Delhi: பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ் மற்றும் பியாஸ் ஆறு ஓடுகிறது. இங்கு தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் ஆறு பெருமளவு மாசடைந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஒருமுறை ஆற்றில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பு அடையத் தொடங்கியது.
இந்த நிலையில், சட்லெஜ் ஆறு மாசடைந்தது தொடர்பான வழக்குகள் குறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, பஞ்சாப் அரசுக்கு ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஆறுகளை மாசுபடுத்தும் தொழிற்சாலை நிறுவனங்களில் இருந்து மாநில அரசு வசூலிக்க வேண்டும்.
பஞ்சாப் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் ராஜஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கும் ஒன்று. பஞ்சாபில் மாசடையும் சட்லெஜ் மற்றும் பியாஸ் ஆறுகள், ராஜஸ்தானில் பாய்ந்து அங்கு 8 மாவட்டங்களில் சுகாதார சீர்கேட்டை பரப்பி வருவதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்குகள் தொடர்பாக அடுத்த விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.