This Article is From Aug 17, 2018

ஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தமிழக அரசின் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

“இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயமே தொடர்ந்து விசாரிக்கும். ஸ்டெர்லைட்டின் பராமரிப்பு குறித்து ஆணையமே முடிவு செய்யும்

ஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தமிழக அரசின் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
New Delhi:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகத்துக்குள் செல்ல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், பசுமை தீர்ப்பாயம், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

“இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயமே தொடர்ந்து விசாரிக்கும். ஸ்டெர்லைட்டின் பராமரிப்பு குறித்து ஆணையமே முடிவு செய்யும். அரசு தனது வாதத்தை ஆணையத்தின் முன் வைக்க வேண்டும். ஆணையம் அதில் இறுதி முடிவு எடுக்கும்” என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது வேதாந்தா தரப்பில் வழக்கறிஞர் சுந்தரம் ஆஜரானார். அரசு பல தகவல்களை மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஸ்டெர்லைட்டை மூடும் உத்தரவை, எந்த வித முன் அறிவிப்பும் இன்றி செய்ததாக, அவர் வாதிட்டார். மேலும், அந்த தொழில் வளாகத்தில் 67 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 14 தொழிற்சாலைகள் அபாயகரமானவை என்றும், அரசியல் காரணத்துக்காகவே ஸ்டெர்லைட்டை அரசு மூட உத்தரவிட்டதாகவும் வேதாந்தா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன் ஆகஸ்ட் 20-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது என சுந்தரம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயமே விசாரிக்கும் என்று கூறிவிட்டனர்.

.