This Article is From Apr 08, 2019

8 வழிச்சாலை தீர்ப்பு! எடப்பாடி அரசுக்கு மரண அடி கொடுத்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்

8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில், மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கில், மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியது செல்லாது, சுற்றுப்புறச்சூழலை பாதிக்கிறது என்று உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கொண்டுவருவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்தி வந்தது.

இதனால், ஐந்து மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வைத்திருந்த நிலங்களை எல்லாம் காவல் துறையை வைத்துப் பறித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பத்தாயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் அடிக்கவே இத்திட்டத்தை நிறைவேற்றத் துடித்தார். மக்களின் போராட்டங்களை அடக்கினார். விவசாயிகளை கொத்துக்கொத்தாக கைது செய்தார்.

Advertisement

இத்திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு சேலம் 8 வழி பசுமைச் சாலை பற்றி பேசுவதையே தவிர்த்தார். ஐந்து மாவட்ட விவசாயிகளை உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் காப்பாற்றியிருக்கிறது. தீர்ப்பைக் கேட்டு பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாடியிருப்பதும், தங்களின் நிலங்களில் போட்ட கல்களை பிடுங்கி எறிந்திருப்பதும் இந்தத் தீர்ப்பு மக்களுக்கு தந்துள்ள மகிழ்ச்சியைக் காட்டுகிறது.

மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. விவசாயிகளை கொடுமைப்படுத்திய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். "இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன்" என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement