ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை முழு வெற்றி பெறுவதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
Davos: நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்- ஆலோசகரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கீதா கோபிநாத் கூறியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பொருளாதார விவகாரங்களிலும், ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச நாணய நிதியம் உதவி செய்து வருகிறது. இதன் ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார். மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மிக முக்கிய பொறுப்பில் இருப்பதை சமூக வலைதளங்கள் இந்திய மக்கள் பெருமைபட பேசினர்.
இந்த நிலையில், கீதா கோபிநாத் என்.டி.டி.வி.-க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது-
முறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்பார்க்கப்பட்டதை விட ஜி.எஸ்.டி. முறை சற்று பலவீனமாகத்தான் காணப்படுகிறது. அதனை நிறைவேற்றும் முறையில் சரிசெய்ய வேண்டியவை உள்ளன.
இந்தியாவை பொருத்தவரையில் விவசாயிகளின் பிரச்னையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்களது கடன்களை ரத்து செய்யவும் கூடாது. அதே நேரத்தில் மானியத்திற்கு பதிலாக பண உதவியை செய்யலாம்.
நடப்பாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு கீதா கோபிநாத் தெரிவித்தார்.
பயிர் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக நேரடியாக பணம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும்.
இந்த நிலையில் மானியத்திற்கு பதிலாக நேரடியாக பணம் வழங்கலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசகர் கீதா கோபிநாத் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.