திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
ஹைலைட்ஸ்
- குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்.
- அடுத்தடுத்த நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழப்பு
- சட்டப்பேரவையில் திமுவின் பலம் 98 ஆக குறைவு
குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காத்தவராயன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருந்துள்ளார். சிறிது காலமாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்த காத்தவராயன் ஒரு மாதத்திற்கு முன்புதான் அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.
நேற்று திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்குக் கட்சியினர் திரளாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அடுத்த நாளே மற்றொரு எம்.எல்.ஏ காலமாகி இருப்பது திமுகவினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழகச் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது.
இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.