பீகார் இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அம்மாநில முதல்வர் குஜராத் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்
New Delhi: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது குழந்தை ஒன்றை பீகாரை சேர்ந்த ஒருவர் கடந்த 28-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. நிலைமை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, போலீசார் அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். சம்பவம் நடந்த சபர்கந்தா மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா அளித்துள்ள பேட்டியில், “குஜராத்திற்கு வேலை தேடி வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது என்பது எங்களது கடமை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளி மாநில இளைஞர்களை தாக்கியது தொடர்பாக இதுவரைக்கும் நாங்கள் 450 பேரை கைது செய்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சம் காரணமாக வெளிமாநிலத்திற்கு சென்ற இளைஞர்கள் குஜராத் திரும்ப வேண்டும்”என்றார்.
இதற்கிடையே, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், குஜராத் முதல் அமைச்சர் விஜய் ரூபானியை தொடர்பு கொண்டு தங்கள் மாநில இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஒரு சிலர் செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த வெளி மாநில மக்களையும் தண்டிக்க கூடாது. வெறுப்பு உணர்வை வளர்க்கவும் கூடாது என்று கூறியுள்ளார்.