This Article is From Jun 03, 2019

புகார் கொடுக்க வந்த பெண்ணை நடுரோட்டில் எட்டி உதைத்த பாஜக எம்.எல்.ஏ - வீடியோ!

ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த சம்பவம் நிகழந்துள்ளது. தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ பால்ராம் தவாணி மீது பாதிக்கப்பட்ட பெண் நீது தேஜ்வானி புகார் அளித்துள்ளார் .

தற்காப்புக்காகவே எட்டி உதைத்ததாக பால்ராம் தவாணி தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • நீது தேஜ்வானி என்சிபி கட்சியின் ஆதரவாளர் ஆவார்.
  • பாஜக எம்.எல்.ஏ பால்ராம் தவாணி மீது புகார் அளித்துள்ளார்.
  • பாஜகவை காங்கிரஸ் மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளது.
Ahmedabad:

அகமதாபாத்: குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் நடுரோட்டில், பெண்ணின் கதறலையும் மீறி எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், பாஜக எம்.எல்.ஏ பல்ராம் தவாணி தாக்குதலில் ஈடுபடுகிறார்.

அகமதாபாத்தின் நரோடா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தண்ணீர் பிரச்சனை காரணமாக அந்த பகுதி எம்.எல்.ஏவிடம் புகார் தெரிவிக்கிறார். தொடர்ந்து, போராட்டத்திலும் ஈடுபடுகிறார்.

இந்த விவகராம் தொடர்பாக தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீது தேஜ்வானி, தாக்குதலில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ மீது புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாட்சியங்கள் கூறும்போது, ஏற்கனவே ஒரு நபரால் அவர் தாக்குதலுக்கு ஆளாகிறார். தொடர்ந்து பல்ராம் தவாணி தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததும், தாக்குதலில் ஈடுபட தொடங்குகிறார்.

இதுதொடர்பாக தாக்குதலுக்கு ஆளான நீது தேஜ்வானி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள தீண்ணர் பிரச்சனை விவகாரம் தொடர்பாக பல்ராமை சந்தித்து முறையிட சென்றிருந்தேன். அவர் எதுவும் கூறாமல், நேராக என்னை வந்து தாக்க தொடங்கினார். இதனை எனது கணவர் பார்க்கவும், அவர் என்னை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார்.

இதைத்தொடர்ந்து, பல்ராமின் அலுவலகத்தில் இருந்த வந்த அவரது ஆதரவாளர்கள் என் கணவர் மீது தாக்குதலில் ஈடுபட தொடங்கினர். இதேபோல், என்னுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் அவர்கள் கடுமையாக தாக்கினர் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பல்ராம் தவாணி கூறும்போது, முதலில் எனது அலுவலகத்தில் வைத்து என் மீது தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து, தற்காப்புக்காகவே வெளியே வந்த போது, அவர் மீது தாக்குதல் நடந்தது. மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆளும் பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பாஜக தலைவர்களிடம் இருந்து அந்த பெண் பாதுகாக்கப்பட வேண்டும், அந்த எம்.எல்.ஏ மீது பாஜக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநித்தின் முதல்வர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சாதாவ் கூறியுள்ளார்.

.