கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றி உத்தரவு பிறப்பித்தார் ஆதித்யநாத்.
Ahmedabad: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ஃபயிஸாபாத், அயோத்யா என்றழைக்கப்படும்' என்று நேற்று தெரிவித்தார். இந்நிலையில் குஜராத் மாநில அரசு, ‘அகமதாபாத் என்றிருக்கும் பெயரை கர்னாவதி என்று மாற்றத் தயார்' என்று அறிவித்துள்ளது.
ஆதித்யநாத், அயோத்யாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ‘அயோத்யா என்பது நமது அடையாளம். அது நமது பெருமை. கடவுள் ராமரின் அடையாளத்தை அது சுமந்து நிற்கிறது. எனவே அவரின் பெருமை என்றென்றும் நிலை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றிலிருந்து ஃபயிஸாபாத் அயோத்யாவாக அழைக்கப்படும்' என்று பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றி உத்தரவு பிறப்பித்தார் ஆதித்யநாத். இந்நிலையில் அயோத்யா பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இப்படி பெயர் மாற்றும் படலம் தொடங்கியுள்ள நிலையில் குஜராத் அரசு, ‘சட்ட ரீதியாக பிரச்னை இல்லாத பட்சத்தில், அகமதாபாத் என்ற பெயரை கர்னாவதி என்று மாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அகமதாபாத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். அதற்கு மக்களிடமிருந்து எங்களுக்கு ஆதரவு வந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்' என்று தெரிவித்துள்ளது.
பாஜக-வின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், ‘அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவது, ஊர்களுக்கு பெயர் மாற்றுவது தான் பாஜக-வுக்கு முக்கியமாக இருக்கிறது. இந்துக்களின் ஓட்டுகளைப் பெற இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது பாஜக' என்று சாடியுள்ளது.