This Article is From May 26, 2020

'குஜராத்தில்தான் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும்' - பாஜகவுக்கு சிவசேனா பதிலடி

பாஜகவின் மற்றொரு முக்கிய தலைவர் முங்கந்திவார் கூறுகையில், 'மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. ஆனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் நிலைக்கு சூழல் செல்லவில்லை' என்று கூறினார். 

Advertisement
இந்தியா

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் நாராயண் ரானே கூறியிருந்தார்.

Mumbai:

மகாராஷ்டிராவை விட குஜராத்தில்தான்  கொரோனா பாதிப்பும், அதனை கையாளும் விதமும் மோசமாக உள்ளதென்றும், குடியரசு தலைவர் ஆட்சியை அங்குதான் முதலில்  அமல்படுத்த வேண்டும் என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

கொரோனாவால் நாட்டிலேயே  அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதனை வைத்து ஆளும் சிவசேனா கூட்டணி அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் நாராயண் ரானே, கொரோனா வைரஸ் பாதிப்பை சரியாக கையாள சிவசேனா அரசு தவறி விட்டது என்றும், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக அவர், மாநில கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை வைத்தார்.

Advertisement

இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு சிவசேனா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

கொரோனாவை மகாராஷ்டிர அரசைவிட குஜராத் தான் மிக மோசமாக கையாண்டு வருகிறது. குடியரசு தலைவர் ஆட்சி அங்குதான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சிவசேனா கூட்டணி அரசில் எந்த குழப்பமும், பிரச்னையும் இல்லை. சிவசேனா அரசை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்கான வழி, எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். இதுகுறித்து பதில் அளித்த சஞ்சய் ராவத், பிரதமர் நரேந்திர மோடியே சரத் பவாரிடம் ஆலோசனை கேட்பார் என்று கூறினார். 

பாஜகவின் மற்றொரு முக்கிய தலைவர் முங்கந்திவார் கூறுகையில், 'மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. ஆனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் நிலைக்கு சூழல் செல்லவில்லை' என்று கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement