பாகிஸ்தான் கடற்படையால் கடந்த ஆண்டு நானுபாய் கைது செய்யப்பட்டார்.
Vadodara: பாகிஸ்தான் சிறையில் சுமார் ஓராண்டாக அடைக்கப்பட்டு உயிரிழந்த குஜராத் மீனவர் நானுபாயின் உடலை சொந்த ஊருக்கு மீட்டு கொண்டு வருமாறு மத்திய அரசை மாநில அரசு கோரியுள்ளது.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் கர்ஜாடி கிராமத்தை சேர்ந்தவர் நானுபாய் கனாபாய் சேலாங்கி (45). மீனவரான இவர் கடந்த ஆண்டு குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், எல்லை தாண்டி மீ பிடித்ததாகக் கூறி நானுபாயை கைது செய்தனர்.
பின்பு அவர் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்போது நடந்தது. இந்த நிலையில், நானுபாயுடன் சிறையில் இருக்கும் விஜய் வஜா என்பவர், நானுபாயின் மனைவி ஜெதிபென்னுக்கு கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 30-ம் தேதி அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், நானுபாய் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது கணவரின் உடலை மீட்டுத் தருமாறு ஜெதிபென் வலியறுத்தி வருகிறார். இதுதொடர்பாக மாநில அரசிடம் அவர் மனு அளித்துள்ளார். இந்நிலையில், குஜராத் மீன் வளத்துறை ஆணையர் கே.ஆர்.பாட்னி, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளியுறவு அமைச்சகம் உடனடியாக தலையிட்டு நானுபாயின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.