ஹைலைட்ஸ்
- இன்று அதிகாலை தீவிரவாதிகள் அனாந்தநாக் பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது
- இதையடுத்து, காவலர்கள் அங்கு விரைந்தனர்
- தொடர்ந்து இரு தரப்புக்கும் துப்பாக்கிசூடு நடந்து வருகிறது
Srinagar:
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் பாதுகாப்புப் படை தரப்பில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டத் தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டனர் பாதுகாப்புப் படையினர். இதில், அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 4 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களை காவலர்கள் சுற்றி வளைத்த நிலையில், தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் தொடுத்தனர். இதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாதுகாப்புப் படை தரப்பில் ஒருவரும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிசூடு நடந்து வருகிறது.
இது குறித்து ஜம்மூ - காஷ்மீர் மாநில காவல் துறையின் தலைவர் எஸ்.பி.வைத், ‘இன்று கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று ட்வீட் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னரே, ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவியிருக்கலாம் என்று வைத் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று போலீஸ் தரப்பே கூறியுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் எந்தவிதத் தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பாதுகாப்புப் படையினர், ரோந்துப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ரமலான் மாதத்தின் போது, மக்கள் அமைதியான முறையில் அதைப் போற்ற வேண்டும் என்ற காரணத்தில் தான் பாதுகாப்புப் படையினர் அவர்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால், இந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இதனால், ஏகப்பட்ட உயிர்ச்சேதம் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்புப் படையினர் அவர்களது நடவடிக்கைகளை இனி முழு வீச்சில் செய்வர்’ என்று கூறியுள்ளார்.