உலகில் மிகவும் மாசுபட்ட 7 நகரங்களை இந்தியா கொண்டுள்ளதாகத் தகவல்!
New Delhi: ஐகியூஏர் ஏர்விஷூவல் மற்றும் க்ரீன் பீஸ் என்னும் அரசு சாரா அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், குர்கனை உலகின் மாசுபட்ட நகரம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஆய்வின்படி, உலக நாடுகளில் அதிகப்படியாக மாசுபட்டிருக்கும் 10 நகரங்களில் இந்தியாவில் 7 நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஆய்வின்படி, பாகிஸ்தானில் 2 நகரங்களும் சீனாவில் ஒரு நகரமும் மிகவும் மாசுபட்ட நகரப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில் குர்கன், காசியாபாத், ஃபாரிதாபாத், பஹிவாடி, நோய்டா, பாட்னா மற்றும் லக்னோ ஆகியவை மிகவும் மாசுபட்ட நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆய்வில், டெல்லி 11வது இடத்தில் இருக்கிறது. ஆய்வறிக்கையில், 'இந்தத் தகவல்கள் அரசு இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டன. நகர மாசுபாட்டை நிர்ணயிக்க பார்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) PM பயன்படுத்தப்பட்டது. பி.எம் அளவு 2.5 இருந்தால் நுறையீரல் புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சுவாசப் பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட வாய்ப்புகள் அதிகம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,000 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனா, தனது தலைநகரமான பீஜிங்கில் இருக்கும் மாசு அளவை சுமார் 40 சதவிதம் குறைத்துள்ளது எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.