புதுடில்லி: புதுடில்லி தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டு போன ஓல்டுவாய் கை கோடாரியை, குர்கான் பகுதியை சேர்ந்த மில்லியனர் திருடி சென்றுள்ளதாக காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி, திருட்டு போன ஓல்டுவாய் கை கோடாரியின் மாதிரியை தேடி சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, குர்கான் பகுதியை சேர்ந்த 53 வயது உதய் ரத்ரா என்ற மில்லியனர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடி செல்லும் காட்சிகளை கண்டறிந்தனர்.
வழக்கு விசாரணை தொடர்பாக, உதய் ரத்ரா வீட்டிற்கு சென்ற காவல் துறையினரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். வீட்டினுள், எட்டு முதல் பத்து நாய்கள் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட ஓல்டுவாய் கை-கோடாரியை எடுத்து கொண்டு வீட்டிலிருந்து தப்பிக்க நினைத்த உதய் ரத்ராவை, காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, ஓல்டுவாய் கோடாரி மனிதர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட பொக்கிஷம் என்று காவல் துறை அறிக்கையில் துணை ஆணையர் மது வர்மா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு, சரோஜினி நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதற்காக, கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்டோரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது பானத்தை திருடிய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதய் ரத்ராவின் தந்தை கடலோர காவல்படையின், இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வந்துள்ளார். மேலும், க்லெப்டோமேனியாக் எனப்படும் அணிச்சை திருட்டு பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.