அலகில் பிளாஸ்டிக் ரிங் உடன் இருக்கும் நாரை
ஹைலைட்ஸ்
- அலகில் பிளாஸ்டிக் ரிங் உடன் இருந்த பறவையின் போட்டோ வைரலாக பரவியது
- அந்தப் பறவை நேற்று பத்திரமாக மீட்கப்பட்டது
- 7 நாட்கள் உணவின்றி இருந்துள்ளது பறவை
சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாரையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்தப் புகைப்படத்தில் நாரையின் அலகில் ஓரு பிளாஸ்டிக் ரிங் மாட்டியிருந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குர்கான் பக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், எதையோ சாப்பிடப் போகும் போது இந்த பிளாஸ்டிக் ரிங் நாரையின் அலகில் மாட்டிக் கொண்டதை யூகிக்க முடிந்தது.
ஆனால், இது வெறும் புகைப்படம் என்று குர்கானைச் சுற்றியுள்ள வன உயிர் செயற்பாட்டளர்கள் விட்டுவிடவில்லை. அந்தப் பறவையை அப்படியே விட்டால் பசி மற்றும் தாகத்தால் இறந்துவிடும் என்று உணர்ந்த செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து அதைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நேற்று அந்தப் பறவை பசாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 5 அடி உயரம் கொண்ட அந்த நாரை அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு உயிரினம் என்பது தெரிய வந்தது. வெகு நேரம் செயற்பாட்டாளருக்கு ஆட்டம் காண்பித்த நாரை வெகு நேரம் கழித்தே பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பசாய் ஒரு சதுப்பு நிலப் பகுதி என்றாலும், அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டப் பகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல வலசை வரும் பறவைகளுக்கு இந்த சதுப்பு நிலப் பகுதி வீடாக இருந்து வரும் போதும் அருகில் இருக்கும் பாட்டல் தயாரிக்கும் நிறுவனம் இதை குப்பைக் கொட்டும் இடமாகவே பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் செயற்பாட்டளர்கள்.
கிட்டத்தட்டட ஏழு நாட்கள் நாரை தண்ணீர் மற்றும் உணவின்றி இருந்த போதும், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அது ஆரோக்கியமாக இருந்துள்ளது. தற்போது பிளாஸ்டிக் ரிங், நாரையின் அலகில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து அதை வன உயிர் காப்பளர்கள் கண்காணித்து வருகின்றனர். சரியான நேரத்தில் மறுபடியும் நாரையை வனப்பகுதியில் விடும் முடிவில் அவர்கள் இருக்கின்றனர்.
பிளாஸ்டிக் எப்படி சுற்றுச்சூழலையும் காட்டூயிர்களையும் பாதிக்கிறது என்று உலகிற்கு மீண்டும் எடுத்துக் கூறும் வண்ணம் இருந்தது இந்த சம்பவம். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு திமிங்கலம், தன் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகளுடன் இறந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் கரை ஒதுங்கியது பலரை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் 8 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் தனிப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், டெல்லியில் உடனடியாக பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடையும் விதித்துள்ளார். சீனா, இலங்கை உள்ளிட்ட 50 நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.