This Article is From Sep 06, 2018

‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே ரெய்டு..!’- விஜயபாஸ்கர் விளக்கம்

ரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவேன்’ என்றுள்ளார்

‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே ரெய்டு..!’- விஜயபாஸ்கர் விளக்கம்

குட்கா ஊழல் தொடர்பாக நேற்று சென்னையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. 40 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவேன்’ என்றுள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் ஏராளமானோரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமான வரித் துறையினர் மாதவ ராவ் அலுவலகத்தில் சோதனையிட்டு அவரின் டைரியை கைப்பற்றிய போது, அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிபிஐ ரெய்டு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜயபாஸ்கர், ‘சிபிஐ சார்பில் நடத்தப்படும் இந்த ரெய்டு நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன். மாதவ ராவ் என்பவருடன் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருந்தது கிடையாது. எனவே, எனக்கு இந்த ரெய்டு குறித்து எந்த பயமும் இல்லை. என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட சிலர் முயன்று வருகின்றனர். அதற்காக ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகின்றனர். நாட்டிலேயே சிறந்த சுகாதாரம் கொண்டுள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்ற நான் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனவே, என் வளர்ச்சி பிடிக்காமல் இப்படி செய்கின்றனர். இதை சட்ட ரீதியில் எதிர்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘நீதிமன்ற வழிகாட்டுதல்படியே சிபிஐ, ரெய்டில் ஈடுபட்டது. இது சாதாரண நடைமுறைதான். ஒருவர் குற்றம் புரிந்தவர் என்று நிரூபிக்கும் முன்னர் நாம் எந்த முடிவுக்கு வர முடியாது. நீதிமன்றத்தில் தான் அது முடிவு செய்யப்படும். எனவே, விஜயபாஸ்கர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்கின்ற கருத்து நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் தான் எழுப்பப்பட வேண்டும்’ என்றார். 

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.