This Article is From Sep 13, 2020

காதல் தோல்வியிலும் தற்கொலை செய்கிறார்கள், அப்போ காதலுக்குத் தடைச்சட்டம் போட முடியுமா? ஹெச். ராஜா கேள்வி

தமிழகத்தில்  பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து வருவதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்

Advertisement
தமிழ்நாடு Posted by

காதல் தோல்வியிலும் கூட தற்கொலை செய்கிறார்கள் என்றால் காதலிப்பதற்கு தடை சட்டம் போட முடியுமா என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று (செப்.12) ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்தனர்.  தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ ஆகியோர் ஏற்கனவே கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாமல் போயினர். இந்தாண்டு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்பில் படித்து வந்தனர். ஆனால், நீட் தேர்வில் இந்தாண்டும் தோல்வியடைந்து விடுவோமா என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டனர். 

இதனால் நீட் தேர்வை ரத்து செய்யும்படி திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரிவிணைவாத சக்திகள் தான் மாணவர்களைப் பயமுறுத்தி வருவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, 'தமிழகத்தில்  பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து வருகின்றனர். நீட் தேர்வு குறித்து மாணவர்களை பயமுறுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனர். 

மாணவர்கள் தற்கொலை செய்வதால் நீட் தேர்வை ரத்து செய்யும்படி கூறுகின்றனர். பிளஸ் 2 தேர்விலும் கூட மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய முடியுமா. காதல் தோல்வியால் கூட சிலர் தற்கொலை செய்கின்றனர். அதற்காக காதலுக்கு தடை சட்டம் போட முடியுமா' இவ்வாறு ஹெச். ராஜா கூறியுள்ளார்.

இதற்கு முன்பு சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement